ரஜினி சொல்லும் அதிர்ஷ்டம், அதிசயம் எல்லாமே அதிமுக தான்-ஜெயக்குமார்

சென்னை, நவம்பர்-18

சென்னை கிண்டியில் ஆளுநரை சந்தித்த பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில்:

முதல்வர் பழனிசாமி தலைமையில், தலைமை தகவல் ஆணையரை நியமிப்பது குறித்து ஆலோசனை நடந்தது. இது தொடர்பான பரிந்துரை கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துள்ளேன். 

தொடர்ந்து ரஜினியின் பேச்சுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார்: யார் வேண்டுமானாலும் அதிசயத்தை, அதிர்ஷ்டத்தை நம்பியிருக்கலாம் ஆனால் நாங்கள் நம்புவது மக்களை. மக்கள்தான் இறுதி எஜமானர்கள். முக்கியமாக 2021ல் மீண்டும் ஒரு அதிசயத்தை கொண்டுவர போகிறார்கள் அது மீண்டும் அதிமுக ஆட்சி என்பதுதான். இந்த அதிசயத்தைதான் ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறார் போல.

அதிமுகவையே தொடர்ந்து இவர்கள் விமர்சிக்க காரணம் பழுத்த மரம்தான் கல்லடி படும். இன்று யாராக இருந்தாலும் சரி எங்களை தொட்டால்தான் பெரிய பிம்பமாக வெளியே தெரிவார்கள். நாங்கள் பெரிய இடத்தில் இருப்பதால் எங்களை மையப்படுத்தி பேசினால்தான் வளர முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. எனவேதான் எங்களை பற்றி பேசுகிறார்கள்.

எந்த அதிசயமும் நடக்காது, அதிர்ஷ்டமும் நடக்காது. அதிர்ஷ்டமும், அதிசயமும் நாங்கதான் எல்லாம். நண்பர் கமல் அரசியலுக்கு வந்துவிட்டார். 6 சதவிகித வாக்குகளை பெற்று அவருடைய சக்தியை காட்டிவிட்டார். ஆனால் ரஜினிகாந்த் இப்போ வருகிறேன் அப்போ வருகிறேன் என்று அரசியல் சமுத்திரத்தில் குதிக்கலாமா? வேண்டாமா? என்ற மைண்ட் தாட்டில் இருக்கிறார். 

முதலில் ரஜினிகாந்த் அரசியல் சமுத்திரத்தில் குதிக்கட்டும் பிறகு ஒன்றாக சேரட்டும். அதன்பிறகு அவர்கள் என்னமாதிரியான கருத்துக்கள், கொள்கைகள் போன்றவற்றை மக்களிடம் முன்வைக்கிறார்கள் என்பதில்தான் எங்கள் தரப்பு கருத்துக்கள் வெளிப்படும். இது சரியான நேரம் அல்ல. எத்தனை பேர் ஒன்று சேர்த்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *