மாணவி பாத்திமா வழக்கில் யாரை காப்பாற்ற முயற்சி நடக்கிறது? –கனிமொழி

டெல்லி, நவம்பர்-18

சென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் மாணவி பாத்திமா வழக்கில் ஒருவர் மீது கூட ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை என திமுக எம்.பி. கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. 20 அமர்வுகளாக நடைபெறும் இந்த கூட்டத்தொடரானது வருகிற டிசம்பர் மாதம் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.  இந்நிலையில் இன்றைய கூட்டத்தொடரின் கேள்வியில்லா நேரத்தின் போது, தூத்துக்குடி எம்.பி., கனிமொழி மற்றும் கேரளாவை சேர்ந்த எம்.பி. பிரேமசந்திரன் ஆகியோர் மாணவி ஃபாத்திமாவின் மரணம் தொடர்பான பிரச்னையை மக்களவையில் எழுப்பி பேசினர்.

அப்போது பேசிய கனிமொழி சாதி, மதரீதியான ஒடுக்குமுறைகளால் உயர்கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் மட்டும் 52 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 72 வழக்குகள் சாதி பாகுபாடு காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார். இது மிகவும் அவமானகரமான விஷயம்.

ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் தற்கொலைக்கு காரணமான பேராசிரியரை இதுவரை ஏன் கைது செய்து விசாரணை நடத்தவில்லை, கால தாமதத்திற்கு காரணம் என்ன?  எனவும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மாணவி தற்கொலை குறித்து அறிக்கை அளிக்கக் கோரி சென்னை ஐஐடி-க்கு உயர் கல்வித் துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எனினும், அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *