இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்சே!!!

அனுராதாபுரம், நவம்பர்-18

இலங்கையின் புதிய அதிபராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச பதவியேற்றார்.

இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்று முடிந்த நிலையில், நள்ளிரவில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு 35 வேட்பாளர்கள் களம் இறங்கியிருந்தாலும் பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சவுக்கும், ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

முதலில் சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றாலும் அதன் பின்னர் கோத்தபய ராஜபக்ச தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தார். மொத்தம் பதிவான சுமார் ஒரு கோடியே 30 லட்சம் வாக்குகளில் 69 லட்சத்து 24 ஆயிரம் 255 வாக்குகள் பெற்று கோத்தபய வெற்றி பெற்றார். இது மொத்த வாக்குகளில் 52 புள்ளி 25 சதவீதம் ஆகும்.

இரண்டாவது இடத்தை பிடித்த சஜித் பிரேமதாசாவிற்கு 41 புள்ளி 99 சதவீத வாக்குகள் கிடைத்தன. அவர் பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 55 லட்சத்து 64 ஆயிரத்து 239 ஆகும். சஜித் பிரேமதாசாவைவிட 13 லட்சத்து 60 ஆயிரத்து 6 வாக்குகள் அதிகம் பெற்று கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை கொழும்புவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 

இலங்கையின் 8-வது அதிபராக கோத்தபய ராஜபக்சே அனுராதாபுரத்தில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே மற்றும் பல்வேறு எம்பிக்கள் பங்கேற்றனர்.

மகிந்த ராஜபக்சே 2005 முதல் 2015 வரை அதிபராக இருந்தபோது, அவரது சகோதரரான கோத்தபய ராஜபக்சே, இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்தவர். இலங்கை போரில் தமிழர்கள் பலர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *