சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு!!!

சபரிமலை, நவம்பர்-16

சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், முந்தைய தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கவில்லை. 

இதையடுத்து, நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி சாமி தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்து உள்ளனர். பெண்கள் ஆர்வலரான திருப்தி தேசாயும் சபரிமலை வர உள்ளதாக அறிவித்து உள்ளார். நிலக்கல் மற்றும் பம்பையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இன்று கேரளா வந்த 10 பெண்களை பம்பையில் வைத்து போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும், சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழக்கப்படாது என கேரள அரசு தெரிவித்துள்ளது. இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மண்டல பூஜை மற்றும் மகர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாலை திறக்கப்பட்டுள்ளது. கோவில் நடை திறக்கப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *