புதிய மாவட்டங்களுக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை-எஸ்.பி.வேலுமணி

சென்னை, நவம்பர்-16

புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு திட்டமிட்டு மாவட்டங்களை பிரித்துள்ளதாகவும், 50 ஆயிரம் ஓட்டு பெறக்கூடிய ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் இனி 5,000 ஓட்டு பெறக்கூடிய வகையில் பிரித்து ஆளுங்கட்சி தேர்தலை நடத்தப்போகிறதா என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருப்பதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தலை நிறுத்தச் சொல்லி ஒரு வார்த்தைகூட கூறாமல் உள்ளாட்சி தேர்தலை நிறுத்துவதற்கு ஆளும் கட்சி திட்டமிடுகிறதோ என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாகவும் வேலுமணி குறிப்பிட்டுள்ளார். தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கான ஆயத்தப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அரசை குறைசொல்லும் நோக்கில் மு.க.ஸ்டாலின் இந்த சந்தேகத்தை எழுப்பியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போது மாவட்டங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டாலும், ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட எல்லை வரையறைப்படி நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் பணிகளை எவ்வகையிலும் பாதிக்காது என்றும் வேலுமணி தெரிவித்துள்ளார்.

புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால், தேர்தலுக்கு பிறகு அவை மேற்கொள்ளப்படும் என அரசாணையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்துள்ளார். 2018ஆம் ஆண்டில் ஏற்கெனவே மறுவரை செய்யப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *