உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி- ஜி.கே வாசன்

திருச்சி, நவம்பர்-16

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்துதான் போட்டியிடுவோம் என்று த.மா.கா. தலைவர் ஜிகே வாசன் கூறியுள்ளார்.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ரபேல் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நரேந்திர மோடி அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இதை சட்டப்படி அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். எதிர்க்கட்சிகள் இனிமேல் ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். சபரிமலை விவகாரத்தில் 7நீதிபதிகள் கொண்ட அமர்வு நல்ல தீர்ப்பு வழங்குவார்கள் என நம்பலாம்.

சென்னை ஐ.ஐ.டி. மாணவி தற்கொலை விவகாரத்தில் உரிய விசாரணை செய்து தவறு செய்தவர்கள எப்பொறுப்பில் இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை கொடுக்கக்கூடிய நிலையை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஏற்படுத்த வேண்டும்.

கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்பவர்கள் மூச்சுத் திணறி இறந்துபோவதை தடுக்க நவீன எந்திர சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் போனதற்கு தி.மு.க. தான் காரணம். மீண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. தீவிர முயற்சி செய்துள்ளது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்துதான் போட்டியிடுவோம்.

எதிர்கட்சிகள் தங்களுடைய தோல்வியை உறுதி செய்த காரணத்தால் தேர்தல் ஆணையம் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அ.தி.மு.க அரசின் செயல்பாடு வளர்ச்சியை நோக்கி செயல்படுகிறது. இது என் தனிப்பட்ட கருத்து. ரஜினி, தமிழ்நாட்டு அரசியல் தலைமையில் வெற்றிடம் உள்ளது என கூறி இருப்பது அவருடைய கருத்து. அந்த கருத்தை கூற அவருக்கு ஜனநாயக உரிமை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *