என் மகளுக்கு நேர்ந்தது கொலையா? தற்கொலையா?-பாத்திமாவின் தந்தை

சென்னை, நவம்பர்-14

சென்னை ஐஐடி யில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்த கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது செல்போனில் பதிவு செய்திருந்த சில ஆதாரங்களை கொண்டு மத்திய குற்றப்பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஃபாத்திமாவின் தற்கொலை மீதான வழக்கில் சம்மந்தப்பட்ட பேராசியர்களை தீவிரமாக விசாரிக்கக்கோரி முதல்வரை சந்திப்பதற்காக ஃபாத்திமாவின் தந்தை இன்று சென்னைக்கு வந்தார். அப்போது, அவர் டிஜியியை சந்தித்தும் புகார் மனு அளித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், எனது மகள் கடிதம் எழுதிவிட்டு தான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நம்புகிறேன். எனது மகள் தற்கொலை செய்து கொள்ளை கயிறு எங்கிருந்து வந்தது. அவள் தங்கியிருந்த அறையில் அது காணப்படவில்லை. மதிப்பெண் விவகாரத்தில் ஐஐடி நிர்வாகம் எனது மகளுக்கு நெருக்கடியை தந்துள்ளது.

அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது எங்களுக்கு தெரிய வேண்டும். இங்க நடந்த கொடுமையை குறித்து ஊடகத்துறை ஆகிய நீங்கள்தான் உண்மையான நிலவரம் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

எங்களது மகளின் தற்கொலை குறித்து ஐஐடி நிர்வாகம் எந்த வித வருத்தத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. மகள் தொடர்பான சிசிடிவி காட்சிகளை என்னிடம் காண்பிக்க மறுக்கின்றனர். போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ள ஃபாத்திமாவின் செல்போன் லாக் செய்யப்பட்டுள்ளது. அதில் நிறைய ஆதாரங்கள் இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

டிஜிபியிடமும் அதுபற்றி வலியுறுத்தியுள்ளோம். தமிழ்நாடு அரசின் மீதும், காவல் துறை மீதும் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் நியாயம் பெற்றுத் தருவார்கள் என நம்புகின்றேன். இன்னொரு ஃபாத்திமாவுக்கு இது போன்று ஒரு நிலைமை ஏற்படக்கூடாது என இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *