சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு அரசு பாதுகாப்பு வழங்காது-அமைச்சர் சுரேந்திரன்

திருவனந்தபுரம், நவம்பர்-15

சபரிமலை ஐயப்பன் கோயில் பெண் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தும் இடம் அல்ல. அவர்களுக்கு அரசு ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் சுரேந்திரன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட 63 சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்தனர்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பின் பெண்ணிய ஆர்வலர் திருப்தி தேசாய், சபரிமலைக்கு வரும் 16-ம் தேதி செல்லப் போகிறேன் என்று அறிவித்திருந்தார்.

இதுகுறித்து மாநில தேவசம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ” சபரிமலை ஐயப்பன் கோயில் பெண் ஆர்வலர்கள் போராட்டம் நடத்துவதற்கான இடம் அல்ல, அவர்கள் விளம்பரம் தேடுவதற்கான இடமும் அல்ல. அவர்களுக்கு ஒருபோதும் அரசு ஆதரவு அளிக்காது. பாதுகாப்பும் வழங்காது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவில் சில குழப்பங்கள் அரசுக்கு இருக்கின்றன. அதுகுறித்து தெளிவுபடுத்த சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்ய விரும்பும் பெண்கள், நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று வந்து சாமி தரிசனம் செய்யலாம்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *