வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு நிலை!!!

சென்னை, நவம்பர்-14

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. வட மாவட்டங்களை விட தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் சற்று அதிகமாக மழை பெய்துள்ளது.

வங்கக்கடல், அரபிக்கடலில் உருவான காற்றழுத்த காரணமாக மழை பெய்த நிலையில் அது புயலாக மாறி தமிழகத்தை விட்டு விலகி சென்றதால் கடந்த சில நாட்களாக மழையின் அளவு குறைந்து வறண்ட வானிலை காணப்பட்டது. காற்றின் ஈரப்பதத்தை புயல் ஈர்த்து சென்றதால் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கத்தொடங்கியது. கடல் காற்றின் வேகம் குறைந்தது. இதன்காரணமாக உருவான வெப்ப சலனத்தால் சென்னையில் மீண்டும் மழை பெய்துள்ளது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி புவியரசன் கூறியதாவது: கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்ட நிலையில், வெப்பச்சலனம் காரணமாக சென்னைக்கு மழை கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் ஆங்காங்கே மழை பெய்யும் வாய்ப்பு உண்டு. மேலடுக்கு சுழற்சி எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லாததால் கனமழைக்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

வங்கக்கடலில் வருகிற 18-ந்தேதி மேலடுக்கு சுழற்சி உருவாகும் அறிகுறி தென்படுகிறது. இது கடலோரம் வரை பரவி வரும் போது மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உருவாகும். எனவே 18, 19 தேதிகளில் பரவலாக மழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *