உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக விருப்ப மனு விநியோகம்

நவம்பர்-14

அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான  விண்ணப்ப படிவங்கள் வழங்கும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் இன்று தொடங்கியது. ஏராளமான அதிமுகவினர் ஆர்வத்துடன் விண்ணப்ப படிவங்களை பெற்றுவருகிறார்கள்.

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் மாதம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப படிவங்கள் இன்றும், நாளையும் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்து இருந்தது. அதன்படி கட்சி அமைப்பு ரீதியான மாவட்டங்களில் அந்தந்த பகுதியில் போட்டி யிடுவதற்காக அதிமுக கட்சி நிர்வாகிகள் உரிய கட்டணம் செலுத்தி ஆர்வத்துடன் வந்து விண்ணப்பங்களை பெற்றுச்சென்றனர்.

சென்னையில் மேயர் மற்றும் கவுன்சிலர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப மனுக்கள் கட்சி அமைப்பு ரீதியான 5 மாவட்டங்களில் பெறப்பட்டு வருகிறது. வட சென்னை தெற்கு மாவட்டம் சார்பில் ராயபுரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விண்ணப்பங்கள் வழங்கினார்.

கோவை அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விண்ணப்ப மனுக்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தார். கோவை மாநகராட்சி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், வார்டு கவுன்சிலர்களுக்கான விருப்ப மனுக்களை காலை 10 மணி முதல் வழங்கப்பட்டு வருகின்றன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் போல், உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்றார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன்ஆகியோர் விண்ணப்பங்கள் வழங்கினர். கோபிசெட்டிபாளையம் பவானி, பவானிசாகர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு உட்பட்ட நகர்மன்ற வார்டு உறுப்பினர் பதவி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், பேரூராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டையில்  மாவட்ட அதிமுக  அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று விண்ணப்ப மனுக்களை வழங்கினார்.

கரூரில் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் விண்ணப்பங்கள் வழங்கினர்.

தருமபுரியில் அதிமுக அலுவலகத்தில், உள்ளாட்சி தேர்தல் விண்ணப்ப  மனுக்களை மாவட்ட செயலாளரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் வழங்கினர்.

மதுரையில்  தமிழ்நாடு ஓட்டலில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ  அதிமுகவினருக்கு உள்ளாட்சி தேர்தலுக்கான விண்ணப்பங்கள் வழங்கினார். மாநகராட்சி மேயர் மற்றும் உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுவதற்காக எராளமான அதிமுகவினர் மனு பெற்றுள்ளனர். பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், உள்ளாட்சித்தேர்தலை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டிய திமுகவினர் தற்போது மவுனமாக இருப்பதாகவும், இதில் மு.க.ஸ்டாலின் நோக்கம் என்ன என்பது  தெரியவில்லை என்றும் கூறினார்.

விழுப்புரத்தில் வடக்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சன்முகம் விருப்ப மனுக்கள் வழங்கி தொடங்கி வைத்தார். இதனையடுத்து அதிமுகவினர் பெருமளவில் வந்து விருப்பமனு பெற்றுச்சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *