ஐஐடி மாணவி தற்கொலை: மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம்

சென்னை, நவம்பர்-14

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்படுவதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா லத்தீப் (18) என்ற மாணவி கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் செல்போனை வைத்து நடத்திய விசாரணையில் தற்கொலைக்கு ஐஐடி பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் கொடுத்த நெருக்கடியே காரணம் என தெரியவந்தது.

மேலும் 4 பேராசிரியர்களின் பெயரும் விசாரணையில் சிக்கியது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவர் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

இந்நிலையில் மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் பேட்டியளித்த அவர் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்: ஐஐடி மாணவி தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறது. சிபிஐ-ல் பணியாற்றிய கூடுதல் ஆணையர் ஈஸ்வர மூர்த்தி தலைமையில் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. கூடுதல் அதிகாரியாக துணை ஆணையர் மெகலினா செயல்படுவார் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *