கர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தனர்

பெங்களூரு, நவம்பர்-14

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 15 பேர் அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியின்போது, கொறடா உத்தரவை மீறியதாக இரண்டு கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். மேலும் அவர்கள் 17 பேரும் 2023 வரை தேர்தல்களில் போட்டியிடவும் தடை விதித்தார்.  இதில் 14 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 3 பேர் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்கள். சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். 

இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தீர்ப்பளித்தது. அதேசமயம் அவர்கள் 17 பேரும் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என அனுமதி அளித்தது. 

அதன்பின்னர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், எடியூரப்பா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். இதற்கிடையே, சட்டசபையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு டிசம்பர் 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *