சென்னையில் 20 ஆயிரம் மாணவர்கள் வீதி வழி பிரச்சாரம்: அமைச்சர் S.P.வேலுமணி தொடங்கி வைத்தார்

சென்னை, நவம்பர்-14

சென்னையில் 20 ஆயிரம் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற வீதி வழி பிரச்சாரத்தை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னை என்பதை வலியுறுத்தி சென்னையில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற வீதி வழி விழிப்புணர்வு பிரச்சாரத்தை தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சுத்தமான சென்னை, சுகாதாரமான சென்னை என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில் சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சியின் பள்ளி மாணவ சுகாதார தூதுவர்களை முன்னிறுத்தும் பன்முக ஊடக பிரச்சாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதன் அடுத்தக்கட்டமாக மழைக்கால நோய்களை தடுப்பதற்காக, சுத்தமான வீடுகள், சுகாதாரமான வீதிகள் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும், சென்னை பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்கும் வீதி வழி விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதேபோல் சென்னை முழுவதும் சுமார் 20 ஆயிரம் பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள வீதிகளுக்கு குழுவாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். ஒவ்வொரு பள்ளியிலும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற   விகிதத்தில்   குழுக்கள் அமைக்கப்பட்டு,  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  இந்த பிரச்சாரம் நடைபெற்றது.

தூய்மைக்கு குரல்கொடுப்போம், நமது சுகாதாரத்தை நாமே பேணுவோம், நிலவேம்பு குடிங்க நிம்மதியா இருங்க, குப்பைக்கும் கொசுக்களுக்கும் குட்பை சொல்வோம்,  என் வீதி உன் கழிப்பறையா, வீதிகளில் இருக்கிற குப்பை வீடுகளில் இருந்து போனதுதானே, குப்பை தொட்டிக்கு அழகு போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை  ஏந்தியும், முழக்கமிட்டும்  மாணவ-மாணவிகள் வீதிகளில் பிரச்சாரம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் ஆணையர் பிரகாஷ் சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை துணை ஆணையர், சுகாதாரத்துறை துணை ஆணையர், மண்டல உதவி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும், மாநகராட்சி பள்ளி மாணவர்களின் வீதி வழி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

முன்னதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாநகராட்சியின் பள்ளி மாணவ சுகாதார விளம்பர தூதுவர்களான சசிகலா, நவ்யஸ்ரீ, நந்திதா காந்தி ஆகிய மூவரையும்   பாராட்டி அவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *