சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்வுக்கு மாற்றம்

டெல்லி, நவம்பர்-14

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்பட்டது. சபரிமலை வழக்கில் சில அம்சங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய சூழல் இருப்பதால் இதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை வழக்கின் விபரம்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், கோயிலில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில் இடம் பெற்றிருந்த நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் பெண்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பையும், நீதிபதி இந்து மல்கோத்ரா, மத விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்ற தீர்ப்பையும் வழங்கினர். பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்துப்படி சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த உத்தரவை கேரள அரசு செயல்படுத்த முயன்றபோது அதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கேரளாவில் பரவலாக வன்முறை போராட்டங்கள் வெடித்தன

மறுசீராய்வு மனு

இதையடுத்து தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் 4 புதிய ரிட் மனுக்கள் உள்ளிட்ட 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. அப்போது சீராய்வு மனுக்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.

நாயர் சர்வீஸ் சொசைட்டி, சபரிமலை கோயில் தந்திரி, கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு மற்றும் கேரள அரசு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து பல்வேறு தரப்பினரின் வாதங்களுக்குப் பிறகு இந்த வழக்கு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளதாவது:

தனிப்பட்ட உரிமைக்கும், வழிபாட்டு உரிமைக்கும் இடையேயான வழக்கு. தீர்ப்பு இந்து பெண்களுக்கு மட்டுமானது என வரையறுத்து விட முடியாது. பெண்களுக்கான கட்டுப்பாடு சபரிமலையில் மட்டுமல்ல. வேறு கோயில்களிலும், மசூதிகளிலும் உள்ளது. சபரிமலை தொடர்பான வழக்கில் மதம் தொடர்பான நம்பிக்கை பற்றி வாதங்களை கருத்தில் கொண்டோம்.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கு 7 நீதிபதிகள் கொண்ட விரிவான அமர்விற்கு மாற்றப்படுகிறது. இவ்வழக்கில் 5 நீதிபதிகளை கொண்ட அமர்வில் 3 நீதிபதிகள், இவ்வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்ற பரிந்துரைத்தனர். இதனையடுத்து 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதனால் சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் நிலையே தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *