ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாண்டிபஜாரில் நடைபாதை வளாகம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை, நவம்பர்-13

சென்னை தியாகராயநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையின் முக்கிய வர்த்தக பகுதியான தியாகராய நகர் பாண்டிபஜாரில் 39 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டது. மேலும், 19 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பில் 23 சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டன. இந்த உலகத்தரம் வாய்ந்த நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மணியடித்து தொடங்கி வைத்தார்.

உள்ளாட்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, அன்பழகன், துரைக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தலைமை செயலர் சண்முகம், உள்ளாட்சித்துறை செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

நடைபாதை வளாகத்தை திறந்து வைத்தபின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பேட்டரி கார்கள் மூலம் சீர்மிகு சாலைகளில் பயணித்து பார்வையிட்டனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் உலகத் தரத்திற்கேற்ப சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மக்கள் எளிதாக பாண்டிபஜார் பகுதியில் பயணம் செய்ய முடியும். போதிய நிதி ஆதாரத்தை திரட்டி அனைத்து சாலைகளும் படிப்படியாக சீரமைக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி பணிகளில் தமிழகம் 8வது இடத்தில் உள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜொலிக்கும் பாண்டி பஜார் சாலை:

சாலைகள் திறப்பு விழாவையொட்டி, பாண்டி பஜார் சாலைகள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கலைநிகழ்ச்சிகளும் நடத்தி காட்டப்பட்டன.  இருபுறங்களிலும் எல்இடி பல்புகள், வண்ண ஓவியங்கள், ஆங்காங்கே இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. விளக்குகள் அனைத்தும் பழங்கால தெருவிளக்குகள் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது.

நடைபாதை மற்றும் சாலைகளோடு ஸ்மார்ட் பார்க்கிங் சிஸ்டமும் தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் நடைபாதையில் பார்க்கிங் வசதி இருக்கிறதா? என்பதை தங்கள் செல்போன் மூலமே தெரிந்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் விளையாட சறுக்கு மரம் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன. அண்ணா சாலையில் தொடங்கி பாண்டி பஜார் காவல் நிலையம் வரை இலவச வை-பை வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சாலையின் கீழே மழை நீர் வடிகால், மின்சார கட்டமைப்பு, தொலைபேசி கட்டமைப்பு, குடிநீர் விநியோக குழாய்கள், பாதாள சாக்கடை குழாய்கள் என்று அனைத்து கட்டமைப்புகளும் வடிவமைக்கப்பட்டுள்ள காரணத்தினால் குறைந்த பட்சமாக அடுத்த 30 ஆண்டுகளுக்கு, இந்த சாலையை தோண்டுவதற்கு தேவை ஏற்படாது.

பாண்டிபஜார் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்க நாளை முதல் இது ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *