ஜே.என்.யூ. மாணவர்கள் தொடர் போராட்டம்: கட்டண உயர்வு வாபஸ்

டெல்லி, நவம்பர்-13

ஜே.என்.யூ மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து மூன்று மடங்காக உயர்த்தப்பட்ட கட்டண உயர்வு பகுதியளவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் இடதுசாரி, தலித் மாணவ அமைப்புகளை முடக்கும் வகையில் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தற்போது தீவிரம் அடைந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, ஆடைக் கட்டுப்பாடு, மாணவர்களின் கல்வி, விடுதி கட்டணங்கள் பன்மடங்காக உயர்வு, போராட்டத்தில் ஈடுபட்டால் ரூ.20, 000 வரை அபராதம் என்பன உள்ளிட்ட மாணவர்களை முடக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டி ஜே.என்.யூ மாணவ அமைப்புகள் கடந்த வாரம் முதல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களின் இந்த போராட்டமானது கடந்த திங்கள்கிழமையன்று உச்சத்தை அடைந்தது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொள்ளும் ஜே.என்.யூ பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகத்தை நோக்கி பேரணியாக சென்ற மாணவர்களை உள்ளே நுழைய விடாமல் போலீசார் இரும்பு தடுப்புகள் கொண்டு தடுத்தனர். அதனை மீறி உள்ளே நுழைய முயன்ற மாணவர்கள் மீது தண்ணீர் பாய்ச்சி அடிக்கப்பட்டது. எனினும், மாணவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால், மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் உயர்த்தபட்ட கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்தை பகுதியளவு திரும்பப்பெற்றுக் கொள்வதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. அத்துடன், பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பொருளாதார நிதியுதவி திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, மாணவர்கள் வகுப்பிற்கு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *