ஆர்.டி.ஐ.க்கு கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும்

டெல்லி, நவம்பர்-13

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இந்திய தலைமை நீதிபதி அலுவலகம் வரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தகவல்களை அளிக்க உத்தரவிட வேண்டும் என எஸ்.சி. அகர்வால் என்பவர் சார்பில், மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் தகவல் அதிகாரி, மத்திய தகவல் ஆணையர் அலுவலகம் ஆகியவை விசாரித்தன. இதனை விசாரித்த, டில்லி உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, 2010ல் தீர்ப்பளித்தது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தலைமை நீதிபதி அலுவலகம் இடம்பெறும் என, தீர்ப்பு அளித்தது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் என்.வி.ரமணா, டி.ஒய். சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சிவ் கன்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்தாண்டு ஏப். 4ல், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (நவ.13) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், தகவல் அறியும் சட்டம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்திற்கும் பொருந்தும் எனக்கூறி, டெல்லி ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது. நீதித்துறையின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக இந்த தீர்ப்பு வழங்கப்படுகிறது. நீதித்துறையின் சுதந்திரத்தை காரணம் காட்டி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது. பொறுப்பும், சுதந்திரமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது என தெரிவித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், 3 பேர், உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தும், 2 பேர் எதிராகவும் தீர்ப்பு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *