விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் என்பது தலைகுனிவு-ஸ்டாலின்

சென்னை, நவம்பர்-13

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மனிதர்களை கொண்டு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய கூடாது என்பதை முன்னிறுத்தி எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை மாறவேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின்: கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர். இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு.

இதில் தி.மு.க. ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை! நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *