அரைமணி நேரம் கூட ரஜினியால் ஒரே நிலைப்பாட்டில் இருக்க முடியாது-சீமான்

திருச்சி, நவம்பர்-13

தன்மீது காவி சாயம் பூசமுடியாது என்று கூறிய ரஜினி, தனது நிலைப்பாட்டில் அரைமணி நேரம் கூட உறுதியாக நிற்கமுடியவில்லை என சீமான் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முறையான கால அவகாசம் கொடுக்காமல், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது பா.ஜ.க.வின் திட்டமிட்ட செயல்.

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் வரிகள் அச்சடிக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அதனால் எந்த பயனும் இல்லை. அதனை யாரும் படிக்க வாய்ப்பில்லை. பாலை ஊற்றிவிட்டு கவரை கிழித்து எறிந்துவிடுவார்கள். பள்ளி பாட புத்தகங்கள் மூலமாக கற்பிப்பதே சிறந்த வழியாக இருக்கும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அமெரிக்காவில் விருது வழங்கப்பட்டுள்ளதன் மூலம் பெருமை அடைகிறேன். அவர் நம்மாளுதான். இங்கு தகுதியுடைவர்களுக்கு மட்டும் தான் முனைவர் பட்டம் வழங்கப்படுகிறதா?

நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் சிவாஜி நிலைதான் ஏற்படும் என்று முதல்வர் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. சிவாஜியை சிறுமைப்படுத்தி இருக்கக்கூடாது. உலகின் தலைசிறந்த நடிகர் சிவாஜி. அரசியலில் அவருக்கு எந்தவித எதிர்பார்ப்போ, நுட்பமோ இருக்கவில்லை. எம்.ஜி.ஆர். 100 படங்களுக்கு மேல் குறிப்பாக, விவசாயி, பட கோட்டி என பல்வேறு படங்களில் திட்டமிட்டு நடித்து அரசியலுக்கு வந்தார். அப்போது கலைஞர் மட்டும் தான் ஆளுமைமிக்க தலைவராக இருந்தார். அதனால் தான் அவரால் வெற்றிபெற முடிந்தது.

தன்மீது காவி சாயம் பூசமுடியாது என்று கூறிய ரஜினி, தனது நிலைப்பாட்டில் அரைமணி நேரம் கூட உறுதியாக நிற்கமுடியவில்லை. அரை மணி நேரம் கழித்து பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, அந்த விவகாரத்தில் பூசி மொழுகி இருக்கிறார். வயது மூப்பின் காரணமாக அரசியலுக்கு வருகின்றனர் என்று முதல்வர் கூறியதில் எனக்கு உடன்பாடு உண்டு.

கருணாநிதி, ஜெயலலிதா என இரண்டு ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்த போதுதான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ஆனால் ரஜினி வெற்றிடம் இருப்பதால் அரசியலுக்கு வருகிறேன் என்கிறார். ஆளுமை இருந்திருந்தால் அவர் வந்திருக்க மாட்டார். 1996-ல் கலைஞர், மூப்பனார் கொடுத்த நெருக்கடி காரணமாக ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். அதன் பிறகு தமிழகத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லையா? எதற்குத்தான் ரஜினி குரல் கொடுத்தார். இவ்வாறு சீமான் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *