சபரிமலை, ரபேல் உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகளில் நாளை தீர்ப்பு

டெல்லி, நவம்பர்-13

சபரிமலை விவகாரம், ரபேல் வழக்கு, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை (14/11/2019) தீர்ப்பளிக்கிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தான் ஓய்வு பெற உள்ள 17-ம் தேதிக்குள் 5 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்க உள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அலுவலகமும் தகவல் அறியும் உரிமை சட்ட வரம்புக்குள் வருகிறது என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்ற செயலாளர் ஜெனரல், தகவல் தொடர்பு அதிகாரி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீது ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு அளிக்கிறது. இதனை தொடர்ந்து நாளை முக்கிய 3 வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீது தீர்ப்பு வழங்கப்படுகிறது. நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது

ரபேல் போர் விமானம் கொள்முதலில் மோடி அரசு எந்த தவறும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் கடந்தாண்டு 14ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதும் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி கொண்ட 3 பேர் அமர்வு, நாளை தீர்ப்பு வழங்குகிறது.

ரபேல் வழக்கில் பிரதமர் மோடியை திருடன் என கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கிரிமினல் கண்டன நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்த மனு மீதும் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *