மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்!!!

மும்பை, நவம்பர்-12

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமைக்கும் மத்திய அரசின் பரிந்துரைக்கு ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், மகராஷ்டிராவில் இன்று முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரவில் பா.ஜ.க. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய எந்த கட்சிகளுக்கும் போதிய பெரும்பான்மை இல்லை. இதையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்க போவதில்லை என பாஜக உறுதிபடத் தெரிவித்தது. இதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா? என கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி எடுத்தது. இதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது.

ஆனால் அந்த கட்சிக்கு வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடதினர். எனினும் சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைமை சில நிபந்தனைகளை விதிக்க விதிப்பதால் இறுதி முடிவெடுப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த ஆளுநர் பகத்சிங் கோஷியாரி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மகாராஷ்டிராவில் எந்த கட்சியுமே நிலையான ஆட்சி அமைக்க இயலாததால், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ன் படி குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என கூறப்பட்டது.  

இந்தநிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நண்பகலில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மகாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இறுதியாக, மகாராஷ்டிரா ஆளுநர் கோஷிரியாவின் அறிக்கையை ஆய்வு செய்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு பரிந்துரையும் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஒப்புதலின் மூலம் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *