ஜனாதிபதி ஆட்சி அமைந்தால் உச்சநீதிமன்றம் செல்ல சிவசேனா திட்டம்

மும்பை, நவம்பர்-12

மகாராஷ்டிராவில் 228 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும், காங்கிரசுக்கு 44 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் சிவசேனா ஆட்சியின் சமபங்கு கோரியதால் இழுபறி நீடித்தது.

ஆட்சி அமைக்க தீவிரம் காட்டிய சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தேசியவாத காங்கிரஸ் ஒருபுறம் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க ஒப்புக்கொண்டாலும், காங்கிரஸ் தயக்கம் காட்டியே வந்தது.

இந்த நிலையில், ஆளுநர் பகத் சிங் கோஷியாரி மாநிலத்தின் முதல் தனிபெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜ.க. வுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் பா.ஜ.க.  ஆளுநரின் அழைப்பை நிராகரித்தது. இரண்டாவது தனிப்பெரும் கட்சி என்ற முறையில் சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

இதனால், சிவசேனா காங்கிரஸ் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியது. ஆனாலும், இறுதி முடிவு எட்டப்படவில்லை. சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒருவேளை மகராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைந்தால் உச்சநீதிமன்றம் செல்ல சிவசேனா திட்டமிட்டுள்ளது. இதற்காக, காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், அகமத் பட்டேல் ஆகியோருடன் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *