மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை?

மும்பை, நவம்பர்-12

மகராஷ்டிராவில் யாரும் ஆட்சி அமைக்க முன் வராததால் குடியரசு தலைவர் ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் 228 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் தேசியவாத காங்கிரசுக்கு 54 இடங்களும், காங்கிரசுக்கு 44 இடங்களும் கிடைத்தன. ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. பாஜக, சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இடங்கள் இருந்தபோதிலும் கருத்து ஒற்றுமை இல்லாததால் இழுபறி நீடித்தது.

ஆட்சி அதிகாரத்தில் சமபங்கை கோரி சிவசேனா விடாபிடியாக இருந்தது.  இதனால், ஆட்சி அமைப்பது குறித்து பா.ஜ.க.வும் சிவசேனாவும் ஆலோசனை நடத்தவில்லை. கடந்த 8-ம் தேதியோடு சட்டப்பேரவையின் காலம் முடிவடைந்தது. இதற்கிடையே, ஆட்சி அமைக்க தீவிரம் காட்டிய சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு இல்லை என்றும், தன்னுடைய கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமரும் என அறிவித்தார்.

ஆனால், தொடர்ந்து ஆட்சி கட்டிலில் அமரவேண்டும் என்ற எண்ணத்தை சிவசேனா மாற்றிக்கொள்ளவில்லை. மீண்டும், மீண்டும், காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளிக்கவேண்டும் என்றால், மத்திய அமைச்சர் பதவியில் இருக்கும் சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தியது. அதன்படியே, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து அரவிந்த் சாவந்த் ராஜினாமா செய்தார். தேசியவாத காங்கிரஸ் ஒருபுறம் சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க ஒப்புக்கொண்டாலும், காங்கிரஸ் தயக்கம் காட்டியே வந்தது.

இந்த நிலையில், ஆளுநர் பகத் சிங் கோஷியாரி மாநிலத்தின் முதல் தனிபெரும் கட்சி என்ற முறையில் ஆட்சி அமைக்க வருமாறு பா.ஜ.க. வுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் பா.ஜ.க.  ஆளுநரின் அழைப்பை நிராகரித்தது. இரண்டாவது தனிப்பெரும் கட்சி என்ற முறையில் சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார் இதனால், சிவசேனா தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடனான பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியது. ஆனாலும், இறுதி முடிவு எட்டப்படவில்லை. சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தயக்கம் காட்டுவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் ஆளுநர் பகத் சிங் கோஷியாரி ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *