அரவிந்த் சாவந்த் ராஜினாமா ஏற்பு: பிரகாஷ் ஜவடேகருக்கு கூடுதல் பொறுப்பு

புதுடெல்லி, நவம்பர்-12

மத்திய கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகிய சிவசேனா எம்.பி. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.

அரவிந்த் சாவந்த் வகித்து வந்த கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறை பொறுப்பு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் வழங்கப்பட்டது.

மகாராஷ்டிராவில் நடந்த முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கும் 56 இடங்களும் கிடைத்தன. ஆனால், முதல்வர் பதவிக்கு சிவசேனாவும், பாஜகவும் போட்டியிட்டதால் இழுபறி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதையடுத்து, சட்டப்பேரவை காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக, ஆளுநர் அழைப்பை நிராகரித்தது.

இதையடுத்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைத்தார். 56 எம்எல்ஏக்கள் வைத்துள்ள சிவசேனாவுக்கு ஆதரவளிக்க காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தயக்கம் காட்டின. ஆளுநரிடம் கூடுதலாக 2 நாட்கள் கேட்ட சிவசேனாவின் கோரிக்கையை ஆளுநர் நிராகரித்தார். அதன்பின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளார்.

இந்நிலையில் சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததும், பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகினால்தான் பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என்று தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. இதனால், மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகிவிட்டதாகவும், ராஜினாமா கடிதம் வழங்கிவிட்டதாகவும் அரவிந்த் சாவந்த் தெரிவித்தார்.

இந்நிலையில், அரவிந்த் சாவந்த் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். பிரதமர் மோடியின் அறிவுரையின் அடிப்படையில் அரவிந்த் சாவந்த் வகித்து வந்த மத்திய கனரகத் தொழில் மற்றும் பொதுத்துறை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது

இதனால், பாஜக தலைமையில் இருந்த ஒரே அமைச்சர் பதவியையும் பறிகொடுத்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பையும் சிவசேனா பறிகொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *