நாங்குநேரி: பாயும் திமுக, பதுங்கும் காங்கிரஸ்,

செப்டம்பர்-7

நாங்குநேரி தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் விளக்கம் கேட்டு நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நேற்று காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். இதில், எம்.பி.வசந்தகுமார், சஞ்சய் தத், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதனைதொடர்ந்து, நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் எனவும், காங்கிரஸ் வேட்பாளரை ஒருமனதாக வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிகழ்வு தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்வு குறித்து விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.


அந்த நோட்டீஸில், நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அப்படி, எந்த தீர்மானமும் முன்மொழியப்படவோ, வழிமொழியப்படவோ, நிறைவேற்றப்படவோ இல்லை.


கூட்டத்திற்கு முன்பு முன்பாக செய்தியாளர்களிடம் தாங்கள் சில தீர்மானங்கள் உள்ளடங்கிய நகலை விநியோகம் செய்துள்ளதாக தெரிவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது கட்சி விதிகளுக்கு புறம்பானது என்றும், மேலும் நடைபெற்றக் கூட்டத்தில் தீர்மானத்தை விளக்கவோ, வாசிக்கவோ, தெரியப்படுத்தவோ இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.  இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தாங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது என்றும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *