டெல்லி ஜே.என்.யூ., மாணவர்கள் போராட்டம்…

டெல்லி, நவம்பர்-11

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், மாணவர்களின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 15 நாட்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையே பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது, பல்கலைக் கழக வளாகம் முன்பாக திரண்ட ஏராளமான மாணவர்கள், ஆர்ப்பாட்ட அணிவகுப்பு நடத்த முடிவு செய்து போலீசார் வைத்திருந்த சாலை தடுப்புகளை தாண்டி பல்கலைக்கழகத்துக்குள் செல்ல முயற்சித்தனர். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் தள்ளு முள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது.

போராட்டம் காரணமாக ஏராளமான போலீசார் பல்கலைக் கழகம் முன்பாக குவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாமல் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் அங்கிருந்து வெளியேற முடியாத அளவிற்கு மாணவர்கள் வாயிலை முற்றுகையிட்டனர்.

மத்திய அமைச்சரை பல்கலைக்கழகத்தில் இருந்து அழைத்துச் செல்ல போலீசார் மற்றும் அதிரடிப்படையினர் மாணவ, மாணவிகளை குண்டு கட்டாக தூக்கியும் பலப்பிரயோகம் செய்தும் அப்புறப்படுத்தினர். இதனை தொடர்ந்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அங்கிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பல்கலைக் கழக நிர்வாகம் முன்வந்து பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என மாணவர்கள் தொடர்ந்து தெரிவித்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *