துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.-க்கு வளரும் நட்சத்திர விருது!!!

சிகாகோ, நவம்பர்-11

சிகாகோவில் ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது’ துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.

அரசுமுறை பயணமாக, அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று (நவ.11) சிகாகோவில் உள்ள மெடோவ்ஸ் கன்வென்சன் சென்டரில் அமெரிக்க பல இன கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ‘உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது-2019’ விழாவில் ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது’ வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: “சர்வதேச வளரும் நட்சத்திம் ஆசியா விருதினை வழங்கி கவுரவப்படுத்தியிருப்பதற்கு முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏதோ சாதித்து விட்டோம் என்ற நினைப்பில் இல்லாமல் – மிகப்பெரிய பொறுப்பு – புதிய பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது என்ற உணர்வுடன் இந்த விருதினை மிகுந்த பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

என் மீது நீங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த எதிர்பார்ப்பும், அன்பும் எனது பொறுப்பை இரட்டிப்பாக்கியிருக்கிறது. உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட வேண்டிய பெரும் கடமை எனக்கு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வாழும் தமிழர்களுக்கும் குறிப்பாக சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்ந்து பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் சிகாகோ வாழ் தமிழ் சமுதாயத்திற்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு விருது அளித்து கவுரவித்த இந்த விழா அமைப்பாளர்களுக்கு நான் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாவற்றிக்கும் மேலாக – என் மீதும், நான் சார்ந்துள்ள அதிமுக மீதும், எங்கள் அரசின் மீதும் தொடர்ந்து நம்பிக்கை வைத்திருக்கும் தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு துணை முதல்வர் ஓபிஎஸ் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *