நவீன வசதிகளுடன் பெண்களுக்கு பிரத்யேக கழிவறை-சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, நவம்பர்-11

சென்னையில் மத்திய, மாநில அரசுகள் அழிக்கும் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் பெண்களுக்காக ரூ.8 கோடி செலவில் 150 நவீன ஷி-கழிவறைகளை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் பயணம் செய்வோருக்கு ஏற்ற வகையிலும், குடிசைப் பகுதிகளுக்கு அருகிலும் 853 இடங்களில் 6,701 இருக்கைகளை கொண்ட பொதுக்கழிப்பிடங்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அந்த கழிப்பிடங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் மகளிருக்காக நவீன முறையில் கழிப்பறைகளை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை நகரம் முழுவதும் மத்திய மாநில அரசுகள் இணைந்து அளிக்கும் நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் ஹூட்டர் அலாரம் மற்றும் சென்சார் போன்ற பெண்களுக்கான பிரத்தியேக பாதுகாப்பு வசதிகள் கொண்ட SHE Toilets என்ற சிறப்பு கழிப்பறைகள் சென்னை மாநகராட்சியால் விரைவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதுபோல பெண்களுக்கு எதிராக அதிக குற்றங்கள் நிகழும் பகுதிகள் குறித்து கண்டறியப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட பகுதிகள் இருந்தால் அவற்றுக்குள் பெண்கள் பயணிக்க நேரிடும் போது முன்னெச்சரிக்கை தகவல்கள் தங்கள் கைபேசிகளில் பெறும் திட்டமும் சென்னை மாநகராட்சியின் பரிசீலனையில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வெளியில் செல்லும் பொதுமக்கள் தங்கள் இயற்கை உபாதைகளை கழிக்க போதிய இடவசதியின்றி அவதிப்படுகின்றனர். குறிப்பாக ஆண்களை விட, பெண்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் அவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் மாநகராட்சியில் அனைத்து மண்டலங்களிலும், பல்வேறு இடங்களில் ரூ.8 கோடி செலவில் மகளிருக்கான 150 நவீன ஷி-கழிப்பறைகளை கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த கழிவறைகளை ஆன்லைனில் கண்காணிக்க முடியும். நீர் இருப்பு, மின் வசதி போன்ற விவரங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே பெற முடியும். மேலும் ஹூட்டர் அலாரம் மற்றும் சென்சார் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்களும் இந்த நவீன கழிவறைகளில் இடம்பெறவுள்ளன.

 பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள பொதுக் கழிப்பிடங்களின் இருப்பிடங்களை அறிந்துகொள்ள ஏதுவாக, அனைத்து பொது கழிப்பிடங்களும் கூகுள் வரைபடத்தில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு, சென்னை மாநகராட்சி மற்றும் கூகுள் வரைபடம் ஆகியவை இணைந்து இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். கூகுள் வரைபடத்தில் ‘Toilet’ என தட்டச்சு செய்தால், தங்களின் அருகில் உள்ள பொதுக்கழிப்பிடங்களின் விவரங்கள் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *