பா.ஜ.க.வுடன் இனிமேல் கூட்டணி இல்லை: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் திட்டவட்டம்

மும்பை, நவம்பர்-11

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் அளித்த வாக்குறுதியை பாஜக காப்பாற்றாத பா.ஜ.க.வுடன் கூட்டணியில் தொடர்வதில் அர்த்தமில்லை என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. சட்டப்பேரவைக் காலம் முடிந்ததையடுத்து, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். ஆனால், பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த பாஜக, ஆளுநர் அழைப்பை நிராகரித்தது.

இதையடுத்து 2-வது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷியாரி அழைத்தார். இதையடுத்து, 56 எம்எல்ஏக்களை கொண்டுள்ள சிவசேனா ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவைக் கோரும் முயற்சியில் சிவசேனா இறங்கியுள்ளது.

இந்நிலையில், மும்பையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகாராஷ்டிர மக்கள் அளித்த தீர்ப்பை பாஜக அவமதித்துவிட்டது. ஆட்சி அதிகாரத்தை சரிபாதியாகப் பிரித்துக்கொள்வது தொடர்பாக மக்களவைத் தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை தற்போது மீறி பாஜக நடக்கிறது.

பாஜகவின் அகங்காரத்தால்தான் தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர விருப்பமாக இருக்கிறது. முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்ள முடியாது என்ற பாஜகவின் அகங்காரம்தான் சூழலை இந்த அளவுக்கு மோசமாக்கி இருக்கிறது. எங்களிடம் அளித்த வாக்குறுதியை பாஜக காப்பாற்ற முடியாவிட்டால், இனிமேல் அந்தக் கட்சியுடன் கூட்டணியில் தொடர்வதில் அர்த்தமில்லை.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து மகாராஷ்டிர மாநிலத்தின் நலனுக்காக குறைந்த செயல்திட்டத்தை வகுத்து செயல்பட வேண்டும் என கேட்கிறேன். சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் மகாராஷ்டிரத்தின் நலனுக்காக செயல்பட ஒப்புக்கொண்டிருக்கின்றன”. இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *