முறிந்தது பா.ஜ.க. சிவசேனா கூட்டணி: மத்திய அமைச்சர் அரவிந்த் சாவத் ராஜினாமா…

டெல்லி, நவம்பர்-11

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி. யும் மத்திய அமைச்சருமான அரவிந்த் சாவத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து பா.ஜ.க – சிவசேனா முறிந்தது உறுதியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க – சிவசேனா இடையே தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. வை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பெரும்பான்மை இல்லாததால் தாங்கள் ஆட்சி அமைக்க முடியாது என பா.ஜ.க. கூறி விட்டது. இதனையடுத்து 2வது இடத்தில் உள்ள சிவசேனாவிற்கு ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார்.

சட்டசபை தேர்தலில் 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சிவசேனா, ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏ.க்களின் பலம் தேவை. இதற்காக 54 எம்எல்ஏ.க்கள் வைத்திருக்கும் தேசியவாத காங்., உடன் கூட்டணி வைக்க சிவசேனா முயற்சித்தது.

தேசியவாத காங் மற்றும் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா திட்டம் வகுத்தது. ஆனால் தேசியவாத காங்., தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளதாகவும், சிவசேனா ஆட்சி அமைக்க தாங்கள் ஆதரவு அளிக்க போவதில்லை எனவும் அறிவித்தது. இருப்பினும் சிவசேனா, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகினால் மட்டுமே தாங்கள் ஆதரவு அளிக்க போவதாக நிபந்தனையும் விதித்திருந்தது.

மத்திய அமைச்சர் ராஜினாமா: 

இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த சிவசேனா எம்.பி., அரவிந்த் சாவத், தனது மத்திய அமைச்சர் பதவியை தான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இவர் மத்திய கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை அமைச்சராக இருந்து வந்தார். தேசியவாத காங்கிரசின் நிபந்தனையை சிவசேனா ஏற்றதன் காரணமாக அரவிந்த் சாவத் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியதால் பா.ஜ.க. – சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்தது உறுதியாகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை தொடர்ந்து மத்தியிலும் பா.ஜ.க. சிவசேனா கூட்டணி முறிந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *