டி.என்.சேஷன் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

சென்னை, நவம்பர்-11

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையரும், தேர்தல் ஆணைய வரலாற்றில் சிறப்பாகச் செயல்பட்டவருமான மகசேசே விருது பெற்ற டி.என்.சேஷன் சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 87. அவருடைய மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி:

டி.என். சேஷன் ஒரு திறமையான அரசு பணியாளர்.  அவர் இந்திய நாட்டிற்காக மிகுந்த அக்கறையுடனும் மற்றும் ஒருமைப்பாட்டுடனும் பணியாற்றியவர். தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கிய அவரது முயற்சிகள் நமது ஜனநாயகம் வலிமை பெறவும் மற்றும் முடிவு எடுப்பதில் பலரும் பங்கேற்கும் வகையிலும் அமைந்தன.  அவரது மறைவு வேதனை அளிக்கிறது. 

ராகுல் காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர்:

இன்றுபோல் அல்லாமல் தேர்தல் ஆணையர்கள் பாகுபாடு இல்லாமல், மரியாதைக்குரியவர்களாக, தைரியமிக்கவர்களாக, பயமற்றவர்களாக செயல்பட்ட காலம் இருந்தது. அவர்களில் ஒருவர் தான் டி.என்.சேஷன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:  

முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையரான டி.என்.சேஷன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர். சேஷன் சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாகப் பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார்.

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக:

டி.என்.சேஷன் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, முழுமையாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக தேர்தல் ஆணையம் கம்பீரமாக திகழ்ந்தது. டி.என்.சேஷன், நேர்மை, கண்டிப்பு, நடுநிலை ஆகியவற்றுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் என்றால், அது மிகையல்ல. சுதந்திரமான, நேர்மையான தேர்தலை நடத்துவதற்கு, தமது அதிகாரம் முழுவதையும் பயன்படுத்தி, தேர்தல் ஜனநாயகம் என்ற தீபத்தைப் பிரகாசிக்கச் செய்த டி.என்.சேஷன், இன்றைக்கு நம்மிடையே இல்லை.

ராமதாஸ், நிறுவனர், பாமக:

இந்தியாவின் தேர்தல் வரலாற்றை டி.என்.சேஷன் பங்களிப்பைக் குறிப்பிடாமல் பதிவு செய்ய முடியாது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் எவ்வளவு என்பதை இந்தியாவுக்கு உணர்த்தியவர் சேஷன். இந்தியத் தேர்தல் முறையில் மலிந்து கிடந்த முறைகேடுகளை களைந்து, வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்தியவர். அதற்காக டி.என். சேஷனுக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருக்கும்.

கமல்ஹாசன், தலைவர், மக்கள் நீதி மய்யம்:

தேர்தல் ஆணையத்தின் சக்திவாய்ந்த பாத்திரத்தை பொதுமனிதனின் விவாதத்துக்கு எடுத்து வந்தவர் டி.என்.சே‌ஷன். தைரியம் மற்றும் நம்பிக்கையின் உருவமாக நினைவுக் கூரப்படுபவர் டி.என். சே‌ஷன்’ என்று கமல்ஹாசன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

இந்திய முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். தமிழக மற்றும் மத்திய அரசுத் துறைகளில் உயர் பொறுப்புகளை வகித்த அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜி.கே.வாசன், தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

நாட்டு மக்கள் நலன் காக்க உள்ளாட்சித் தேர்தல், மத்திய, மாநில அரசுகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகிய தேர்தல்களில் நேர்மையான சரியான நடவடிக்கைகளை எடுத்தால் தான் நாட்டுக்கு நல்லது என்பதை உணர்ந்தவர். அதன் அடிப்படையிலேயே நேர்மையாக, முறையாக தேர்தல் விதிமுறைகளை முழுமையாகக் கடைபிடித்து தேர்தலை நடத்தியவர்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் உள்ளிட்ட பலர் டி.என்.சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *