அயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

டெல்லி, நவம்பர்-09

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவரது உரை பின்வருமாறு:

இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்தியா ஒரு வலிமைமிக்க ஜனநாயக நாடு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அயோத்தி தீர்ப்பை நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்திய வரலாற்றில் இன்று புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

இந்திய நீதித்துறையின் வரலாற்றில் தங்கத்தால் பொறிக்கப்படவேண்டிய நாள் இது. நமது அரசியலமைப்பும், சட்டமும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் வகையில் உள்ளது.  அயோத்தி தொடர்பான சர்ச்சை விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது.

இந்திய வரலாற்றில் நவம்பர்-9ம் தேதி தனித்துவம்ம் வாய்ந்த நாளாக மாறியுள்ளது. தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பது இந்த தீர்ப்பின் மூலம் உறுதிபட மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. நமது ஒற்றுமையே புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பை வரவேற்ற விதம் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரிய நல்லிணக்கத்திற்கு சான்று. வேற்றுமையும், எதிர்மறை எண்ணங்களும் மறைந்த தினம் இன்று. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு சான்று கிடைத்த தினம். நமது ஜனநாயகம் எவ்வளவு பலம் பொருந்தியது என உலகமே இன்று தெரிந்துகொண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *