மழை நீர் சேகரிப்பில் எழுச்சி

செப்டம்பர்-7

தண்ணீர் தேவையில் தன்னிறைவை நோக்கி தமிழகம்?

பருவநிலை மாற்றம், சுற்றுச் சூழல்பாதிப்பு போன்ற காரணங்களால் பருவமழை பொய்த்து தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது.

இதனால் நீர் நிலைகள் வறண்டு நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து, தமிழகத்தின் 17 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40 சதவீதம் நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35 சதவீதம் ஆவியாகுவதாகவும், 14 சதவீதம் பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10 சதவீதம் மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 

 இந்த நிலையில் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழகத்தில் கடந்த 2001ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்டாய மழைநீர் சேகரிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டதன் பயனாக   2006ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 50 விழுக்காடு வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

 பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கண்டுகொள்ளவே இல்லை.  2011 ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அரசும் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டது.

இந்தசூழலில் மத்திய, மாநில அரசுகள் நீர்வள பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசு ஜல்சக்தி அபியான் இயக்கத்தை முன்னெடுத்து அனைத்து மாநிலங்களிலும் நீர் மேலாண்மை பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது.


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடிமாராமத்து பணிக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கி ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பணிகளை விரைந்த முடிக்க உத்தரவிட்டுள்ளார். இதேபோல், உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள சிறுபாசன ஏரிகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளிலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.  மழை நீர் சேகரிப்பு மற்றும் நீர் வளத்தை பாதுகாக்கும் நோக்கில் நீர் மேலாண்மை திட்டமும்  இயக்கமாக செயல்பட்டு வருகிறது.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்பங்கிற்கு வடகிழக்குப் பருவமழைக்கு முன்னர் வீடு மற்றும் கட்டடங்கள் தோறும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் செயலாற்றி வருகிறார்.

உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துத் திட்டத்தில் பணிகள், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் தமிழகத்தில் மூன்று மாதங்களுக்குள் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார். உள்ளாட்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் ஊராட்சி அலுவலக கட்டடங்கள், அரசு கட்டடங்களில் ஒரு மாத காலத்திற்குள் மழை நீர் கேரிப்பு கட்மைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

மழை நீர் சேகரிப்பு குறித்த அரசின் செயல்பாடுகள் ஒருபுறம் விமர்சிக்கப்பட்டாலும் மறுபுறம் மழை நீர் சேகரிப்பில் தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்பினர், பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள், மாணவர்கள் என பலர் மழை நீர் சேகரிப்பு கட்மைப்புகளை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.

மழை நீர் சேகரிப்பின் பயனாகவும் அன்மையில் பெய்த மழை காரணமாகவும்   சென்னயில் வறண்டு காணப்பட்ட நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.சென்னை மாநகராட்சியின்  நிலத்தடி நீர் மட்டமும் 4 அடி உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.  இதேபோல் வேலூர் உள்ளிட்ட வறட்சி மாவட்டங்ளில் கூட  நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்குவது மற்றும் பராமரிப்பது,நீர் நிலைகளை சரியாக பாதுகாத்து பராமரிப்பது,தண்ணீர் சிக்கனம் போன்ற நடவடிக்கைகளில் அரசும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தண்ணீர் தட்டுப்பாடு என்ற நிலை நிச்சயம் மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *