அயோத்தி தீர்ப்பு: மத நல்லிணக்கத்துடன் முன்னெடுக்க வேண்டும்-ஸ்டாலின்

சென்னை, நவம்பர்-09

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் மத நல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்வார்கள் என நம்புவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், நீண்ட நெடுங்காலமாக இருந்துவந்த பிரச்சனைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வு கண்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு வழங்கியதற்கு பிறகு, அதை எந்தவித விருப்பு வெறுப்புக்கும் உட்படுத்தாமல் அனைத்து தரப்பினரும் சமமான சிந்தனையுடன் ஏற்றுக்கொண்டு, மத நல்லிணக்கம் போற்றி நாட்டின் பன்முகத்தன்மையை எவ்வித சேதாரமும் ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்துச் செல்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *