தீர்ப்பில் திருப்தியில்லை, விரைவில் சீராய்வு மனு: சன்னி வக்ஃபு வாரியம்

புதுடெல்லி, நவம்பர்-09

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாகவும், தீர்ப்பின் நகல் கிடைத்த பின்பு விரைவில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வாய்ப்பிருப்பதாக சன்னி வக்பு வாரிய வழக்கறிஞர் ஜிலானி கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தும், மசூதி கட்டுவதற்கு வக்ஃபு வாரிய அமைப்பு விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், முழுக்க முழுக்க அந்த சர்ச்சைக்குரிய இடத்தில் இஸ்லாமியர்கள் தான் இருந்தார்கள் என சன்னி வக்ஃபு வாரியம் ஆதாரத்தோடு நிரூபிக்கவில்லை என்ற கருத்தையும் நீதிமன்றம் கூறியிருந்தது. அதனால், சன்னி வக்ஃபு வாரியத்தின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில், அயோத்தி வழக்கில் சன்னி வக்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞரும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் நிர்வாகி சப்ரயப் ஜிலானி கருத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். எனினும் தீர்ப்பில் திருப்தியில்லை. தீர்ப்பைக் காரணமாக வைத்து யாரும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. தீர்ப்பின் முழு விபரங்களையும் படித்தபின்பு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். ஒரு அமைப்பினருக்கு மட்டும் முழு நிலத்தையும் வழங்கியது திருப்தியில்லை. என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *