இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க உத்தரவு

புதுடெல்லி, நவம்பர்-09

அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசித்தார். அப்போது, பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் முன்பே கட்டிடம் ஒன்று இருந்துள்ளது.

சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோரமுடியும். நம்பிக்கையின் அடிப்படையில் நிலத்திற்கு உரிமை கோர முடியாது. ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டிடம் அல்ல. சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது. அலகாபாத் நீதிமன்றம் நிலத்தை மூன்றாக பிரித்து கொடுத்தது தவறு. அந்த உத்தரவு செல்லாது.

இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க ஆணை:

ஆகையால், இஸ்லாமியர்களுக்கு ஏற்றவாறு அயோத்தியில் 5 ஏக்கர் நிலம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்களுக்கு ஏற்ற இடத்தை மத்திய மாநில அரசுகள் உடனடியாக ஏற்படுத்திகொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *