காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை-உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, நவம்பர்-09

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

காலி இடத்தில் மசூதி கட்டப்படவில்லை:

ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தின் நம்பிக்கையை தடுக்கும் விதமாக அமைய கூடாது. வரலாறு, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது இந்த வழக்கு. மதசார்பின்மையே அரசியலமைப்பின் அடிப்படை பண்பு. பாபர் மசூதி பாபர் ஆட்சி காலத்தில் தான் கட்டப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறோம். அதே சமயம் பாபர் மசூதி எப்போது கட்டப்பட்டது என்பதற்கு எந்த துல்லிய ஆதாரமும் இல்லை.

நீதிமன்றம் நடுநிலை காக்கும் நிலையில் உள்ளது. இந்த வழக்கில் நடுநிலை காக்கப்படும். அமைதியை காக்கும் விதத்தில், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். நிலத்திற்கு உரிமை கோரிய ஷியா அமைப்பின் மனுவில் ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் முன்பே கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்திய தொல்லியல் துறை கொடுத்த ஆதாரங்கள் ஆராயப்பட்டுள்ளன.

12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில் அங்கு இருந்ததாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. 12-16 ம் நூற்றாண்டிற்குள் சர்ச்சைக்குரிய இடத்தில் என்ன இருந்தது என்பதற்கு ஆதாரம் இல்லை. ராமர் நம்பிக்கை கேள்விக்கு இடமில்லை. ராமர் மீதான இந்துக்களின் நம்பிக்கை விவாதம் மற்றும் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டது.

சட்டத்தின் அடிப்படையில் தான் நிலத்திற்கு உரிமை கோரும் விவகாரத்தில் முடிவு செய்ய முடியும். ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்ற இந்துக்களின் நம்பிக்கையில் விவாதத்திற்கு உள்ளாக்க முடியாது. ஆவணங்களின்படி சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இந்த வழக்கில் தொல்லியல் துறையின் ஆதாரங்களை புறம் தள்ள முடியாது.

இந்துக்களின் நம்பிக்கையை குலைக்க முடியாது. மத நம்பிக்கை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. மசூதியின் அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய முறை கட்டிடம் அல்ல. சர்ச்சைக்குரிய கட்டிடம் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபாடு நடத்தியதற்கான ஆதாரம் உள்ளது. வரலாறு, மதம், சட்டம் என்பதை கடந்து அயோத்தி விவகாரத்தில் உண்மை பயணித்துள்ளது. நிலத்தின் உரிமையை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் கோர முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *