பிரச்சனையை தீர்க்க கதவுகள் திறந்தே இருக்கிறது: சிவசேனாவுக்கு பட்னாவிஸ் அழைப்பு

மும்பை, நவம்பர்-08

ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா எங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசையே சந்தித்தார்கள் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. மாநில சட்டசபை பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. இதனையடுத்து, ஆளுநர் பகத் சிங் கோஷாரியை, முதல்வர் பட்னவிஸ் சந்தித்தார். அப்போது, முதல்வர் பதவியை ராஜினமா செய்து கடிதம் வழங்கினார். இதனை கவர்னர் ஏற்று கொண்டார்.

பின்னர் பட்னாவிஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது: மஹாராஷ்டிரா மாநில மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, பிரதமர் மோடி, பாஜ.க. தலைவர் அமித்ஷா, நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை பா.ஜ.க, அளித்தது. மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றினோம். ஆட்சி அமைக்க விதித்த கெடு முடிவடைந்துவிட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்காக ஏராளமான திட்டங்கள் துவக்கப்பட்டன.

பா.ஜ.க. சிவசேனாவுக்கு தான் மக்கள் ஓட்டளித்தனர். பிரச்னையை தீர்க்க இன்னும் கதவுகள் திறந்தே உள்ளன. உத்தவ்வை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அவர் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா எங்களுடன் ஆலோசனை நடத்தவில்லை. ஆனால், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை சந்தித்தது.

சுழற்சி முறையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வது குறித்து சிவசேனாவுடன் ஆலோசனை நடத்தவில்லை. ஆட்சியில் சமபங்கு வழங்குவது குறித்தும் பேசப்படவில்லை. பிரச்னையை தீர்க்கவே நாங்கள் விரும்புகிறோம். கடந்த காலங்களில், எங்களை சிவசேனா பல முறை அவமானப்படுத்தியது. உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக நான் பேசியது இல்லை. அக்கட்சியின் நடவடிக்கைகள் கவலையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. அக்கட்சியின் நடவடிக்கைகள் மூலம் எப்படி ஆட்சி அமைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *