உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜினாமா
செப்டம்பர்-7
மேகாலயா நீதிமன்றத்திற்கு தன்னை மாற்றுவது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்யும் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க கொலீஜியம் மறுத்ததால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியை தஹில்ரமணி ராஜினாமா செய்தார்.

தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அவர், குடியரசு தலைவருக்கும் அனுப்பியுள்ளார். மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்த தஹில்ரமணி 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் வருகிற 2020 ஆண்டு ஓய்வுபெறவுள்ளார். இந்த நிலையில், தஹில்ரமணியை மேகலாயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்தது.

தஹில்ரமணியை மேகாலயாவிற்கும், மேகாலயா தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. மேகாலயாவில் தற்போது 4 நீதிபதிகள் மட்டுமே உள்ள நிலையில், தன்னை மேகாலயா ஐகோர்ட்டிற்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கொலீஜியத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது கோரிக்கையை கொலீஜியம் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் அதிருப்தி அடைந்த தஹில்ரமணி தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார். மேலும், தன்னை உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்