சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து

டெல்லி, நவம்பர்-08

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல், பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் இசட் பிளஸ், இசட், ஒய் மற்றும் எக்ஸ் பிரிவுகளில் விஐபிக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மிக, மிக முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு உள்ள அச்சுறுத்தலின் அடிப்படையில் அவர்களுக்கு இந்த பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இந்த பட்டியலில் இடம் பெற்றவர்கள். இந்த பாதுகாப்பில், தேசிய பாதுகாப்பு படையில் பயிற்சி பெற்ற வீரர்கள், குண்டு துளைக்காத கார் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம் பெறும்.

அதேபோல், பிரதமர், முன்னாள் பிரதமர், அவர்களது நேரடி குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு பாதுகாப்புப் படையின் (எஸ்பிஜி) உயரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அக்கட்சியின் தற்போதைய இடைக்காலத் தலைவர் சோனியா உள்ளிட்டோருக்கு இந்த உயர் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் அக்கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல், பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அவர்களுக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் வழங்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக, முன்னாள் பிரதமர் என்ற அடிப்படையில் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *