வங்கதேசத்துக்கு எதிரான டி-20: இந்திய அணி அபார வெற்றி..!

ராஜ்கோட், நவம்பர்-08

வங்கதேசத்துக்கு எதிரான 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்றது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது. 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா- சிகர் தவான் கூட்டணி வலுவான துவக்கம் தந்தது.

குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டத்தில் அனல் பறந்தது. பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக அடித்து வான வேடிக்கை காட்டிய அவர், 43 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இறுதியில், 15.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, இலக்கை எட்டியது.

3 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், இறுதிப்போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *