முதல்வர் பதவி எங்களுக்கு தான்: சிவசேனா விடாபிடி, மராட்டிய அரசியலில் நீடிக்கும் குழப்பம்…

மும்பை, நவம்பர்-08

மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைத்தால், முதல்வர் பதவியில் சிவசேனாவைச் சேர்ந்தவர்தான அமர்வார். இடைக்கால அரசை பாஜக தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. ஆனால், ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கட்சி பிடிவாதம் செய்து வருகிறது.

மாநில சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதற்கிடையே மாதோஸ்ரீ இல்லத்தில் நடைபெற்ற சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இன்றுடன் தேவேந்திர பட்னாவிஸ் அரசின் பதவிக்காலம் முடிகிறது. ஆனாலும், சிவசேனா இன்னும் தனது பிடியை தளர்த்தவில்லை என்பதை அந்த கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் உணர்த்தியுள்ளார். மும்பையில் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்குத்தான் முதல்வர் பதவிஎன்ற கோரிக்கையை பாஜக ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்தக் கட்சியுடன் எந்தவிதமான பேச்சும் நடத்தப்படும்.

காபந்து அரசு என்ற போர்வையில் இருந்துகொண்டு திரைக்குப் பின்னால் இருந்து ஆட்சி செய்ய பாஜக நினைக்கக்கூடாது. பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க முதலில் அழைத்தாலும் அது குறித்து சிவேசேனா எந்தக் கவலையும் கொள்ளாது.

இரண்டரை ஆண்டுகளுக்கு முதல்வர் பதவியை பகிர்ந்து அளிப்பதோடு, அமைச்சர் பதவியையும் உரிய அதிகாரத்தில் பகிர்ந்து அளிக்க வேண்டும். நாங்களும் விரைவில் ஆளுநர் கோஷ்யாரியைச் சந்திக்க இருக்கிறோம். தேவேந்திர பட்னாவிஸ் பதவிக்காலம் முடிந்தபின், ஆளுநர்தான் மாநிலத்துக்குப் பொறுப்பாளர். கர்நாடக அரசியல் போன்று மகாராஷ்டிராவில் நடக்காது. இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *