மீனாட்சியம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம்: முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை, நவம்பர்-08

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த நிலையில் திருப்பதி கோவிலை போன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களை மகிழ்விக்கும் வண்ணம் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது.

கடந்த தீபாவளி முதல் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பணிகள் நிறைவு பெறாததால் லட்டு பிரசாதம் வழங்குவது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் லட்டு தயாரிக்கும் எந்திரம் வடமாநிலத்தில் இருந்து மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, தெற்கு ஆடிவீதி, யானை மகால் அருகே உள்ள இடத்தில் நிறுவப்பட்டது. அந்த எந்திரத்தின் மதிப்பு சுமார் ரூ.4 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து புதிய எந்திரம் மூலம் லட்டு தயாரிக்கும் சோதனை ஓட்டமும் நடந்தது. அதில் ஒரு மணி நேரத்தில் 2,400 முதல் 3 ஆயிரம் லட்டுகள் வரை தயாரிக்கப்பட்டது.

பக்தர்களின் வருகையை கணக்கில் கொண்டு தினமும் குறைந்தது 20 ஆயிரம் லட்டுகளை தயாரிக்க நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தயார் நிலையில் வைத்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *