நான் உங்களுக்கானவன்–கமல்ஹாசன்

பரமக்குடி, நவம்பர்-07

நான் எப்போது உங்களுக்கானவன் என பரமக்குடியில் நடைபெற்ற தனது பிறந்தநாள் விழாவில் கமல்ஹாசன் பேச்சு

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது சொந்த ஊரான பரமக்குடியில் அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், கமல்ஹாசனின் குடும்பத்தாரும், கலைத்துறையில், பிரபு, சுகாசினி உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டு கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த விழாவில், கமல்ஹாசன், அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் மேடையில் பேசியதாவது: எங்கள் குடும்பம் அற்புதமான குடும்பம். அதன் நிஜத்தலைமை பொறுப்பை வகித்தவர் என் தந்தை சீனிவாசன். அவரிடம் இருந்துதான் நான் நகைச்சுவையையும், பிறவற்றையும் கற்றுக்கொண்டேன்.

நான் அரசியலுக்கு வருவதை எனது குடும்பத்தில் யாரும் விரும்பவில்லை. ஆனால் ஒரே ஒரு நபர்தான் வரவேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தார். அதனை நாங்கள் உதாசீனம் செய்தோம். அதுவும் இன்று நிறைவேறி விட்டது. போக்கிடம் இல்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை.

பள்ளிக்கல்வியை முடித்தவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. துப்புரவு பணிக்கு கூட பி.எச்.டி. படித்தவர் விண்ணப்பிக்கும் நிலை வந்துள்ளது. வேலை வாய்ப்புகளை தர பல்கலைக்கழகங்கள் மட்டும் போதாது. பல தொழில்கள் கற்பதற்கு ஆள் இல்லாமல் உள்ளது.

நான் சலூன் கடையில் ஒன்றரை மாதம் வேலை பார்த்திருக்கிறேன். அங்கு கிடைத்த பாடம் தான் பின்னாளில் நாள் வேறு தொழிலில் வளர காரணமாக இருந்தது. எந்த தொழிலும் கீழானது இல்லை. ராணுவத்தில் இறப்பவர்களின் எண்ணிக்கையை விட சாலை விபத்தில் சிக்கி இறப்பவர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இளைஞர்களை ராணுவத்திற்கு அனுப்ப பெற்றோர்கள் முன் வர வேண்டும்.

இங்கே அனைத்தையும் இலவசமாக கொடுத்து விடுகிறார்கள். கிரைண்டர் கூட இலவசமாக கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை குறைந்த விலையில் கொள்முதல் செய்ததால் 3 மாதங்களுக்குள் பழுதாகிறது. அதனை சரி செய்வதற்கு போதிய ஆட்கள் இல்லை. அவர்களை உருவாக்க இந்த திறன் வேலை வாய்ப்பு மையம் உதவும்.
இலவசம் 3 மாதங்களுக்கு கூட தாங்காது. ஆனால் நாங்கள் ஏற்படுத்தியுள்ள இந்த மையம் வாழ்நாள் முழுவதும் தாங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *