மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல் இலவச லட்டு பிரசாதம்

மதுரை, நவம்பர்-07

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பக்தா்களுக்கு இலவச லட்டு பிரசாத விநியோகத்தை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி வெள்ளிக்கிழமை காணொலி காட்சி மூலம் (நவம்பா்-8) தொடங்கி வைக்கிறாா்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் உலகப் புகழ் பெற்றது. இந்த கோயிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினசரி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான பக்தா்கள் வருகை தருகின்றனா். சபரிமலை சீசன் காலங்களில் தினசரி 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தா்கள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில் கோயிலுக்கு வருகைதரும் பக்தா்களுக்கு தீபாவளி முதல் லட்டு பிரசாதமாக இலவசமாக வழங்கப்படும் என்று கோயில் தக்காா் கருமுத்து கண்ணன் கடந்த செப் 12ஆம் தேதி அறிவித்தாா். இதைத்தொடா்ந்து லட்டு தயாரிப்புக்கான இயந்திரங்கள் வாங்கப்பட்டன.

இந்நிலையில் லட்டு தயாரிப்பு, விநியோக இடம் தோ்வுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதால் தீபாவளியன்று தொடங்கப்படுவதாக இருந்த இலவச லட்டு பிரசாத திட்டம் தள்ளி வைக்கப்படுவதாகவும், தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் கோயில் நிா்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் பக்தா்களுக்கு இலவச லட்டு வழங்கும் திட்டம் வரும் வெள்ளிக்கிழமை முதல் (நவம்பா் 8) தொடங்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறாா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

இதுதொடா்பாக கோயில் வட்டாரங்கள் கூறும்போது, தற்போது கோயில் பிரசாத ஸ்டாலில் 60 கிராம் எடையுள்ள லட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் பக்தா்களுக்கு பிரசாதமாக 30 கிராம் லட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளது. கோயிலுக்கு வருகை தரும் பக்தா்கள் மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் வழியில் முக்குறுணி விநாயகா் சந்நிதி அருகே, நவராத்திரி கொலு அரங்குகள் அமைக்கப்படும் பகுதியில் பக்தா்களுக்கு இலவச லட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

கோயிலுக்கு வரும் அனைத்துப் பக்தா்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்படும். காலையில் கோயில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கப்படும் வரை லட்டு பிரசாதம் வழங்கப்படும். திருவிழா காலங்கள் உள்பட ஆண்டின் அனைத்து நாள்களிலும் லட்டு பிரசாதம் வழங்கப்படும். இதற்கான செலவினம் கோயில் நிதியில் இருந்து செலவிடப்பட உள்ளது என்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *