தங்கள் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜ.க. முயற்சி-சிவசேனா குற்றச்சாட்டு

மும்பை, நவம்பர்-07

மராட்டியத்தில் ஆட்சி அமைக்க தங்கள் எம்.எல்.ஏக்களை இழுக்க பாஜக சூழ்ச்சி செய்வதாக சிவசேனா குற்றஞ்சாட்டி உள்ளது.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் கிடைத்தன. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தத்தின்படி ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கோரி வருகிறது.

வரும் 8-ம் தேதிக்குள் சட்டப்பேரவையின் காலம் முடிவதால் அதற்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், ஆளுநர் முடிவு எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இரு கட்சிகளின் தொடர் பிடிவாதம் காரணமாக, தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் ஆன போதிலும், மராட்டியத்தில் இன்னும் புதிய அரசு அமையவில்லை. சிவசேனா இறங்கி வருவதாக தெரியவில்லை தனது பிடிவாதத்தில் குறியாக உள்ளது.

சிவசேனா, தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின்  தலையங்கத்தில், பாரதிய ஜனதா அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள புதிதாக  தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களை வேட்டையாடி வருவதாக மறைமுகமாக குற்றம் சாட்டியது. ஆட்சியில் பங்கு என்ற  சிவசேனாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தி  உள்ளது.

சிவசேனா தனது எம்.எல்.ஏக்களை சொகுசு விடுதியில் தங்க வைத்து இருப்பதாக கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், எங்கள் எம்.எல்.ஏக்கள் தங்கள் தீர்மானத்தில் உறுதியாக இருக்கிறார்கள், கட்சிக்கு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் முதலில் தங்கள் எம்.எல்.ஏ.க்களைப் பற்றி கவலைப்பட வேண்டும் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *