ஐ.டி. துறையில் ஆட்குறைப்பு கூடாது: முதலமைச்சர் பழனிசாமி

சென்னை, நவம்பர்-07

சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பான சிஐஐ சார்பில் இரண்டு நாள் தகவல் தொழில்நுட்ப மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.  கண்காட்சியை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார். அவர் பேசுகையில், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்யக்கூடாது. ஆட்குறைப்பு நடவடிக்கையை தவிர்ப்பது தொடர்பாக இந்த சிஐஐ மாநாட்டில் விவாதிக்க வேண்டும்.

அதிக அளவில் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையில் 6 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கி உள்ளோம். கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ரூ.6 ஆயிரத்து 500 கோடி முதலீடு கிடைத்துள்ளது. 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

மாநில தகவல் குடும்ப தொகுப்பு உருவாக்கப்படும். அரசு அலுவலகங்களை மக்கள் தேடி வராமல் மக்களை தேடி அரசு செல்லும் கனவு நிறைவேறுகிறது தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு கடந்த ஆண்டு நான் தொழில் அதிபர்களை கேட்டுக் கொண்டேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் முதலீடு செய்துள்ள, முதலீடு செய்ய முன்வரும் தொழிற்துறையினருக்கு நன்றி. முதலீட்டாளர்களை இருகரம் நீட்டி அழைக்கும் அரசாக தமிழக அரசு திகழ்கிறது. புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன. மிகப்பெரிய நிறுவனங்களின் கிளைகளும் சென்னையில் உள்ளன என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

குறிப்பாக காக்னிசென்ட், இன்போசிஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் பெரிய அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *