உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஆலோசனை கூட்டம்!!!

சென்னை, நவம்பர்-06

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  

இந்த கூட்டத்தில், நடந்து முடிந்த 2 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் வெற்றிபெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில் இந்த மாதத்திற்குள் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

அதிமுக ஆலோசனை கூட்டத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக குழு அமைப்பது உள்ளிட்டவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

உள்ளாட்சித் தேர்தலில், ஒருங்கிணைந்து செயல்பட்டு, அ.தி.மு.க. கூட்டணிக்கான வெற்றியை கைப்பற்றுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சிறந்த வேட்பாளர்களை தேர்வு செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடைத்தேர்தலில் எப்படி பணியாற்றி வெற்றிபெற்றதுபோல் திட்டமிட்டு பணியாற்றி உள்ளாட்சித்தேர்தலிலும் அதிமுகவை வெற்றிப்பெறச் செய்யவேண்டும்.  95% இடங்களை அதிமுகவே கைப்பற்றும். போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்களை பெற குழு அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *