பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனின் 4 நூல்கள் வெளியீடு

சென்னை, நவம்பர்-06

சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் (MUJ) பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனின் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டது. இதில், சென்னை பத்திரிகையாளர் சங்க தலைவர் ஸ்ரீதர், பொதுச்செயலாளர் சங்கர், பொருளாளர் மணிமாறன், நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த நூலின் ஆசிரியர் மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் மற்றும் நூல்கள் பற்றி மூத்த பத்திரிகையாளர் ராஜதுரை எழுதியுள்ள விமர்சனத்தை விரிவாக காணலாம்:

 கடந்த 35 வருடங்களாக பத்திரிகை உலகில் பயணிப்பவர் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். விவசாய நேசன், சமூக ஆர்வலர், பாரம்பரிய உணவு கலைஞர் என்று பன்முகம் கொண்ட படைப்பாளி. தன்னை ஈன்ற சமூகம் நோய்பிடித்து நிற்பதைக் கண்டு   பதைபதைத்து இந்நூலை எழுதியுள்ளார்.

புற்றுநோய், மாரடைப்பு, இரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்றவை நம் சமூகத்திற்குள் புகுந்து பேயாட்டம் போட்டுக் கொண்டிருப்பதைக்கண்டு அவரால் பொறுக்க முடியாமல் நோய்த் தடுப்பு முயற்சியாக இந்த நூலை படைத்துள்ளார்.

அதிகாலை விழித்தெழுவது முதல் இரவு தூங்கப்போகும் வரை நாம் உண்ணும் உணவு, பருகும் பானங்களை கொஞ்சம் கண்ணுற்றால் கேடு தரும் ரசாயன கலவைகள் உணவுடன் கலந்து ஏராளமாக வயிற்றுக்குள் செல்வதை உணர்ந்து கொள்ள முடியும், அண்மைக்காலமாக நிலைமை மிக மோசமடைந்து வருவதை சுட்டிக்காட்டி நோய்க்கு  மூல காரணம்  இதுதான் என்கிறார்.

இந்திய மருந்து மாத்திரைகளின் சந்தை ரூ 1,60,000 கோடிகள்ஆகும். விற்பனையாகும் மருந்து மாத்திரைகளில் 90% தேவையற்றவை என்று பிரபல மருத்துவர் ஆனந்த் பத்கே கூறுகிறார். உலக சுகாதார அமைப்பு, முக்கியமான மருந்து மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளது. இவற்றின் எண்ணிக்கை 150 க்கும் குறைவே. இவற்றைக் கொண்டு 95 சதவீத நோய்களை கட்டுப்படுத்த முடியும் என்கிறார்கள் மூத்த மருத்துவர்கள், ஆனால் இத்துறையில் நடப்பது என்ன என்பதை அனைவருமே அறிவர்.

குறுகிய வணிக நோக்கு கொண்ட பெரு நிறுவனங்களுக்கு வால்பிடிக்கும், “அரசாங்கம் நம்மை காப்பாற்றாது, நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்துகிறார்.

மனிதனைவிட அறிவில் குறைந்த உயிரினங்களான பறவை இனங்களும் விலங்கினங்களும் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை உணவுத் தேடலில் மாறாத நிலைப்பாட்டை கொண்டிருக்கும்போது மனிதர்கள் மட்டும் இந்த சூழலுக்கு தள்ளப்பட்டது ஏன்? என்று சிந்திக்கச் சொல்கிறார்.

மைதாவில் தயாராகும் பீட்சா, பர்கர், நாண், பரோட்டா உள்ளிட்ட அனைத்திலுமே பென்சாயில் பெராக்சைடால், அயிலட்டாசான், சோடியம் பென்சோட் போன்றவை உள்ளன. இவை மலச்சிக்கல், இரத்த அழுத்தம், நீரிழிவுக்கு வித்திடும் என்பதையும் சிக்கனுக்கு செந்நிறம் கொடுக்க பயன்படுத்தும் ரசாயனம் புற்றுநோய்க்காரணி என்றும் ஆய்ந்தறிந்து வெளிப்படுத்துகிறார்.

வெள்ளைச் சீனி, பிஸ்கட், மரபணு மாற்றம் செய்யப்பட்ட மோரீஸ் பச்சைப்பழம், சாக்லேட், தற்போதைய முட்டை, சிக்கன், குளிர்பானங்கள் போன்றவற்றில் உள்ள நச்சுப் பொருட்கள் என்னென்ன? அவை எப்படி எல்லாம் நம் உடம்பில் நோய்களை ஏற்படுத்துகின்றன என்பதை ஆதாரங்களுடன் விவரிக்கிறார்.

நம் முன்னோர் அருமையான உணவுப் பழக்கத்தை கைக் கொண்டிருந்தனர்.  ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசிகள் அப்போது இருந்தன. இப்போது 170  ரகங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதாக வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார். தான் ஒரு பாரம்பரிய உணவு சமையற்கலைஞர் என்பதால் பாரம்பரிய அரிசி ரகங்கள், சிறுதானியங்களைப் பயன்படுத்தி  சுவையான- நன்மை பயக்கும் உணவுவகைகள் இன்னின்ன செய்ய முடியும் என்று பட்டியலிடுகிறார்.

வாயில் தொடங்கி மலக்குடல் வரை நாம் உண்ணும் உணவு 27 அடி தூரம் பயணிக்கிறது. எனவே, வயிற்று பாகத்தில் உள்ள மற்ற உடல் உறுப்புகள் நலனையும் கருத்திற் கொண்டு உணவைத் தேர்வு செய்து உண்ணுங்கள் என்று வேண்டுகிறார். பாமரர்களுக்கும் புரியும் வகையில் எளிய நடையில்   வெறும் 74 பக்கங்களில் தேவையான தகவல்கள் முழுவதையும் சொல்லியுள்ளார்.

அனைத்து வகை மருத்துவர்களிடமும் நேர்காணல் செய்தவர் என்பதால் நோய்களுக்கெல்லாம் மூலகாரணிகளான மலச்சிக்கல், மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்றவற்றை தவிர்க்கும் எளிய வழிமுறைகளை இந்நூல் வாயிலாக விளக்குகிறார். நம் முன்னோர்களின் உணவில் “வறுத்தது, பொறித்தது இடம் பெறவில்லை என்பதை   சுட்டிக் காட்டுகிறார். மூன்று வகை நாடி பார்த்து நோயை கண்டறிந்த அவர்களின் நுட்பமான அறிவாற்றலை சொல்லி வியக்க வைக்கிறார்.  அதுபற்றிய விரிவான தேடலுக்கு 60 வருடங்களுக்கு முன்பு கந்தசாமி முதலியார் எழுதிய நூலை படிப்பதற்கு நம்மை உந்தித் தள்ளுகிறார். சாவித்திரி கண்ணன் என்னும்” நவீன பாரதி”யின் இப்புத்தகம் வீடு தோறும் இருக்க வேண்டியது அவசியம்.

இப்புத்தகத்தை வாசித்தோர்க்கு நோய்த்தடுப்பு நண்பனாக இது திகழும் என்பது உறுதி.

            – ம. வி. ராஜதுரை

( புத்தகம் கிடைக்குமிடம்: காக்கைக்கூடு பதிப்பகம்,  18.ஆதாம் தெரு, மயிலாப்பூர், சென்னை – 4.cell: 9043605144 செழியன்). mail:crownest2017@cmail.com.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *