அழகர்மலை தமிழக வனத்துறைக்கு சொந்தமானது-உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, நவம்பர்-06

மதுரையை அடுத்த அழகர் மலைப்பகுதி தமிழக வனத்துறைக்கு சொந்தமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், அழகர் மலைப்பகுதி கோயில் நிர்வாகத்துக்கே அழகர் மலை சொந்தமானது என்ற மதுரை உயர் நீதிமன்ற கிளை தீர்ப்பையும் உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துள்ளது.

மதுரையிலிருந்து 25 கி.மீ. அமைந்திருக்கிறது அழகர் கோயில்.  மிகவும் பிரசித்திபெற்ற வைணவத் தலமான இந்த கோயில் வனப்பகுதியில்தான் அமைந்திருக்கிறது. இப்பகுதி அழகர் மலை என அறியப்படுகிறது.

இந்நிலையில் அழகர் மலை இந்து அறநிலையத்துறைக்கே சொந்தமானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், அழகர் மலை அறநிலையத்துறைக்கே சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழக வனத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பல ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பில், “அழகர் மலையை கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தம் என்று வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை ரத்து செய்யப்படுகிறது. அழகர் மலை வனம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு மரங்களை வெட்டுதல், கட்டுமானப் பணி மேற்கொள்ளுதல் உள்ளிட்ட எவ்விதப் பணிகளிலும் ஈடுபடக் கூடாது.

அதேவேளையில், ஏற்கனவே அரசு மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு இடையே பேசி ஒப்புக்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கத்திற்கான 25 அடி அகல நிலம் என்ற வாக்குறுதியை மட்டும் நிறைவேற்றிக் கொள்ளலாம்” என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *